இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், அக்டோபர் 21 முதல் 23 வரை மூன்று நாட்களுக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் தேங்கிய நீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர்.

இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

அக்.21 காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவில் வடபழனியில் 131 மி.மீ., சைதாப்பேட்டையில் 122 மி.மீ., கொளப்பாக்கத்தில் 121 மி.மீ. என அதிகமாக பதிவானது. மேலும் ஆலந்தூர் 115 மி.மீ., வளசரவாக்கம் 109 மி.மீ., மடிப்பாக்கம் மற்றும் மதுரவாயல் தலா 107 மி.மீ., நெற்குன்றம் 106 மி.மீ., நுங்கம்பாக்கம் 105 மி.மீ., அடையாறு 101 மி.மீ. என குறிப்பிடத்தக்க அளவில் மழை பதிவானது.

கனமழை காரணமாக அக்.21 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.