புதுடில்லி ஜந்தர் மந்தரில் விதிக்கப்பட்ட தடையை மீறியதாக ‘கரப்பான்’ அமைப்பைச் சேர்ந்த சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா கைது செய்யப்பட்டனர். இருவரும் அக்டோபர் 21 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
காவல் காலம் முடிவடையும் நாளிலேயே, நீதிமன்ற காவல் உத்தரவை எதிர்த்து இருவரும் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சுப்ரமணியன் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்ற காவல் தொடர்பான விசாரணை நடைபெறுவதற்கு முன்பே தனியாக வழக்கு தாக்கல் செய்தது ஏன், அதுவரை காத்திருக்க முடியாதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், மனுதாரர்களின் வயது 27 மற்றும் 31 என்பதால், இவர்களை ‘ஜென் ஸி’ எனக் கூற முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இவர்கள் ஏற்கனவே கையெழுத்திட்ட பிணைப் பத்திர உத்தரவாதத்தை மீறியுள்ளனர் என்றும், மக்களாட்சியில் ஆட்சி மாற்றம் தேர்தல் மூலமே வர வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். ரிட் மனுவை ஏற்க விருப்பமில்லை என நீதிமன்றம் தெரிவித்ததைத் தொடர்ந்து, மனுதாரர்கள் மனுவை திரும்பப் பெற்றனர்.





