சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து இந்தியாவை எதிர்மறையாக சித்தரிக்க முயல்வதாகக் கூறி, ஐநாவில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் பர்கா தம்ரக்கர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் குறிவைக்கும் முயற்சிகளை இந்தியா ஏற்காது என்றார்.
மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை நாடுகளுக்கு எதிராக அரசியல் அழுத்தம் கொடுக்கும் கருவியாக பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் கூறினார். மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண இந்தியாவில் ஆட்கொணர்வு மனு உள்ளிட்ட சட்ட வழிமுறைகளும், தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையங்களும் உள்ளன என அவர் சுட்டிக்காட்டினார்.
முறையான ஆவணங்களுடன் கூடிய குறிப்பிட்ட புகார்கள் இருந்தால் அவற்றை தெளிவுபடுத்த இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.





