டில்லியில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். விஜயதசமி தீமை மீது நன்மை வெற்றி பெற்ற நாளாகக் கொண்டாடப்படுவதாகவும், சத்தியம் மற்றும் நீதியின் அழியாத வலிமையை அது நினைவூட்டுவதாகவும் அவர் கூறினார். ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்வதே முன்னுரிமை எனவும் தெரிவித்தார்.
கடவுள் ராமரை இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபட்டு வந்ததாகக் கூறிய மோடி, ராமர் மனிதகுலத்திற்கு ஈடு இணையற்ற லட்சியங்களை வழங்கியதால் அந்த நம்பிக்கை உருவானதாகச் சொன்னார். பல இன்னல்களை சந்தித்தபோதும் ராமர் சத்தியம் மற்றும் கொள்கையின் பாதையை கைவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராமரின் வாழ்க்கை இன்றைய காலத்திற்கும் ஒரு பாடம் என மோடி கூறினார். நெருக்கடி பெரியதாக இருந்தாலும், சவால் அச்சுறுத்தலாக இருந்தாலும், பிறரைச் சார்ந்து நிற்காமல் தங்களின் ஆற்றலை உணர்ந்து, சொந்த வளங்களை நம்பி, உறுதியை வலிமையாக்கி, கடின உழைப்பின் மூலம் தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றார். “ராமராஜ்ஜியம்” என்ற கருத்தில் யாருக்கும் எதிராகப் பாகுபாடு இல்லை; அனைவருக்கும் சமமான நீதி மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வளர்ந்த இந்தியா மற்றும் தன்னிறைவு பெற்ற பாரதம் என்ற இலக்குகளை மீண்டும் வலியுறுத்திய அவர், நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள்; அவர்களை அடையாளம் கண்டு தோற்கடிக்க வேண்டும் என்றார். அதிகாரத்தின் நோக்கம் ஆள்வதல்ல; பொதுமக்களின் நலனை உறுதி செய்வதே என்று கூறி, அதையே ராமரின் லட்சியமாகவும் அவர் இணைத்துப் பேசினார்.





