நேபாளத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 84 பேர் இன்னும் காணாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பேரிடரில் தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் சிக்கியதாக கூறப்படும் நிலையில், 220 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் மற்றும் ஒருங்கிணைப்புக்காக தமிழக அரசின் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு காத்மண்டுவில் 50 நாட்களுக்கும் மேலாக முகாமிட்டு செயல்பட்டது. அந்த குழு உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை அடையாளம் காண உதவியாக, கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் அவர்களது உறவினர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு (DNA) பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகளை தமிழக அரசு நேபாள அரசிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இருப்பினும், காணாமல் போன தமிழர்களின் நிலவரம் குறித்து நேபாள அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். காத்மண்டுவில் முகாமிட்டிருந்த தமிழக அதிகாரிகள் குழு சில நாட்களுக்கு முன் சென்னை திரும்பி, மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதற்கிடையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஏதேனும் தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அயலக தமிழர் நலத்துறை அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறையை தினமும் தொடர்பு கொள்கிறார்கள். உறுதியான தகவல் இல்லாததால் என்ன பதில் கூறுவது என அதிகாரிகள் திணறுவதாகவும், அமைச்சர்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் இதுவரை உறவினர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.