இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்போது பணியில் உள்ள சில அதிகாரிகள், அமெரிக்கா, போர்ச்சுகல், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் பாகிஸ்தான் அமைப்புக்குள் உள்ள ஆழமான அச்சம் மற்றும் நம்பிக்கையின்மையை காட்டுவதாக, இந்தியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியும் பாகிஸ்தான் நிபுணருமான திலக் தேவாஷர் கருத்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர், நாட்டின் எதிர்காலம் மீது மூத்த அதிகாரிகள் நம்பிக்கை இழந்துவிட்டார்களா என கேள்வி எழுப்பி, இதை “மூழ்கும் கப்பலை விட்டு எலிகள் தப்புவது” போன்ற நிலை என ஒப்பிட்டார்.

மேலும், வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிடுபவர்களில் போர்ச்சுகல் ஒரு முக்கிய விருப்ப நாடாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் அதிகாரிகள் போர்ச்சுகலில் சொத்து வாங்கியதாக வெளியான தகவல்கள் தொடர்பாக அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தகவல்களைப் பெற அரசுத்துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு சம்மன் அனுப்ப பாகிஸ்தான் பொதுக்கணக்கு குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.