ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி மற்றும் கடும் விலைவாசி உயர்வு காரணமாக அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பிரான்சில் தொடங்கிய போராட்டங்கள் இத்தாலி, அல்பேனியா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி, பல இடங்களில் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்சில் குறிப்பாக தலைநகர் பாரிஸில் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. சில பகுதிகளில் கடைகள் சூறையாடப்பட்டதாகவும், சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்ததாகவும் செய்தி கூறுகிறது.

அறிக்கையின்படி, பாரிஸில் போதிய கல்வி வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சில மாணவர் அமைப்புகள் போராட்டத்தை தொடங்கின. பின்னர் ஆசிரியர்களும் இணைந்த நிலையில், இது நாடு முழுவதும் பரவியது. இதற்கிடையே விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கும் பிற அமைப்புகளும் போராட்டங்களில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

கருப்பு உடை அணிந்து முகமூடி போட்ட சிலர் போராட்டங்களை பயன்படுத்தி கடைகளை உடைத்து கொள்ளை, தீவைப்பு போன்ற வன்முறைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. லிமோஜஸ் நகரில் 140 ஆண்டுகள் பழமையான டவுன் ஹால் கட்டடத்திற்கு தீ வைக்கப்பட்டதாகவும், இரு உலகப் போர்களையும் தாண்டி வந்த அந்த வரலாற்று கட்டிடம் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பாரிஸில் நடந்த மோதல்களில் 150க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டங்களில் அத்துமீறியதாக கூறி 2,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ள நிலையில், பாரிஸில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தலைநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களின் சில பகுதிகளில் பொது ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.