மும்பை: இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்காவுக்கு இந்தியா முக்கியமான வர்த்தக மற்றும் வணிக கூட்டாளி என்றும், குவாட் அமைப்பில் இந்தியா முக்கிய உறுப்பினராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நான்கு முறை அமெரிக்கா சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை நடத்துவதில்லை என்றாலும், நடப்பதைத் தெரிந்து கொள்வதாக ரூபியோ கூறினார். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலைக்கு அருகில் இருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியாவின் திறனை சுட்டிக்காட்டிய ரூபியோ, கடினமான கச்சா எண்ணெயையும் சுத்திகரிக்கும் திறன் இந்தியாவிடம் இருப்பதாகவும், இதை கடந்த காலங்களிலும் செய்துள்ளதாகவும் கூறினார். வெனிசுலாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மீண்டும் அதிகரிக்கும் சூழலில், சலுகை விலையிலான வெனிசுலா கச்சா எண்ணெயை இந்தியா பயன்படுத்த முடியும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.
உலகளாவிய பற்றாக்குறையை வெனிசுலா மட்டும் தீர்க்கும் என்று கூறவில்லை என்ற ரூபியோ, காலப்போக்கில் அது உதவக்கூடும் என்றும், குறுகிய காலத்திற்கு நிச்சயம் ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். இது குறித்து இந்தியாவுடன் முன்பே பேசியுள்ளதாகவும், இந்தியாவும் தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், தடைகள் உள்ளிட்ட இடையூறுகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
எரிசக்தி இறக்குமதியை பன்முகப்படுத்தும் விருப்பத்தை இந்தியா வெளிப்படுத்தியது ‘புத்திசாலித்தனமான செயல்’ என ரூபியோ பாராட்டினார். இதை ஒரே நாளில் செய்ய முடியாது என்றாலும், அந்த திசையில் இந்தியா கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அதை காண மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.





