புதுடில்லி: கோவில் சொத்துகளுக்கு அரசு உரிமையாளர் அல்ல; வெறும் பாதுகாவலர்/பராமரிப்பாளர் மட்டுமே என உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. மன்னர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் கோவில்களுக்கு அர்ப்பணித்த நிலம், கட்டடம், நகை போன்ற சொத்துகள் இறைவனுக்கே சொந்தம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள நாகபாளையம் மாரியம்மன்–பொன்னாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் 10 சென்ட் நிலம், 2017ல் தற்காலிக அறங்காவலராக நியமிக்கப்பட்ட நபரால் தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக அரசுக்கு தானமாக வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் அந்த தானத்தை ஏற்றுக் கொண்டு, வருவாய் பதிவேட்டில் நிலம் அரசின் பெயருக்கு மாற்றப்பட்டு ‘சர்க்கார் புறம்போக்கு’ என வகைப்படுத்தப்பட்டதுடன், அங்கு தாலுகா அலுவலகமும் கட்டப்பட்டது.

இதனை எதிர்த்து பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 1959ஆம் ஆண்டின் ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் கோவில் நிலத்தை மாற்ற முடியாது என அவர்கள் வாதிட்டனர். ஆனால், ‘மாற்றம்’ தொடர்பான சட்டப்பிரிவில் ‘தானம்’ குறித்து வெளிப்படையாக இல்லை எனக் கூறி, 2019ல் உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் அராதே அமர்வு, சம்பந்தப்பட்ட நிலம் கோவில் வழிபாடு மற்றும் பராமரிப்புக்காக வழங்கப்பட்ட இனாம் சொத்து எனக் கண்டறிந்தது. ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் 41வது பிரிவின் கீழ் இனாம் நிலத்தை தானமாக வழங்குவது செல்லாது என சட்டம் தெளிவாக இருப்பதால், தற்காலிக அறங்காவலர் செய்த தானப் பத்திரம் சட்டப்படி செல்லாது; அதை அரசு ஏற்றதும் சட்டவிரோதம் என தீர்ப்பளித்தது. பொதுநல நோக்கம் இருந்தாலும், கோவில் நிலத்தை அரசுக்கு வழங்குவது சட்டத்தின் நோக்கத்துக்கு முரணானது என்றும் கூறப்பட்டது.

அதே நேரத்தில், அந்த இடத்தில் தாலுகா அலுவலகம் ஏற்கனவே பொதுமக்களின் நிர்வாக தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு கட்டடத்தை இடிக்க உத்தரவிடவில்லை. ஆனால் மாத வாடகையை ரூ.13,235 இலிருந்து ரூ.31,000 ஆக உயர்த்தி, 2019 மார்ச் 8 முதல் கணக்கிட வேண்டும் என உத்தரவிட்டது. ஏற்கனவே செலுத்திய தொகையை கழித்துவிட்டு மீதமுள்ள வாடகை நிலுவையை மூன்று மாதங்களுக்குள் அரசு செலுத்த வேண்டும்; வழக்கு செலவாக கோவிலுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறியது. குத்தகை காலம், புதுப்பித்தல் உள்ளிட்ட நிபந்தனைகள் சட்டப்படி கோவில் அறக்கட்டளை தீர்மானிக்க வேண்டும்; கோவிலின் நலனே முதன்மை என்றும், கோவில் சொத்து பரிவர்த்தனைகளில் அரசு மற்றும் அறநிலையத் துறை சட்ட விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.