தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பதிவாகியுள்ளது.

வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், 3 மாவட்டங்களில் கனமழையும், 13 மாவட்டங்களில் மிதமான மழையும் பதிவானதாக தெரிவித்தனர். அதிகபட்சமாக சென்னை எம்சிஆர் பகுதியில் 13 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

அக்.26 வரை வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடரும்; அதன் பின்னர் படிப்படியாக குறையக்கூடும் என்றும் கூறினர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழை பெய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், அது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் வானிலை மையம் கூறியது. இதன் காரணமாக அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும் அக்.23ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் இன்னொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்; கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் கூறினர்.