தமிழகத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணி நாட்கள் 150 ஆக உயர்த்தப்பட்டு, அதற்கான கூடுதல் செலவுக்காக ரூ.100 கோடி நிதியை அரசு விடுவித்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ‘விக்சித் பாரத்’ வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டத்தை சமீபத்தில் 125 நாட்களாக உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் புதிதாக அமைந்த த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு, மாநிலத்தில் இதை 150 நாட்களாக உயர்த்துவதாக அறிவித்த நிலையில், அதை நடைமுறைப்படுத்த தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வெளியிட்ட அரசாணைப்படி, பதிவு செய்யப்பட்ட கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஒரு நிதியாண்டில் 125 நாட்கள் ஊதியத்துடன் வேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நடப்பு ஆண்டில் ஜூலை 1 முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டதாகவும், நிதி பகிர்வு மத்திய–மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 125 நாட்கள் வேலைவாய்ப்பை முழுமையாக பயன்படுத்திய தகுதியான குடும்பங்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு மொத்தம் 150 நாட்கள் வேலை பெற முடியும்.

கூடுதல் 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்குவதில் ஆறு பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், தனியாக வசிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள். அரசாணையில் குறிப்பிடப்பட்ட இந்த ஆறு பிரிவுகளைத் தவிர பிறருக்கு கூடுதல் 25 நாட்கள் கிடைக்காது என்பதும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.