நிதி நெருக்கடியை காரணமாகக் காட்டி, காசா மற்றும் மேற்குக் கரையில் சுமார் 7 லட்சம் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு உதவியை ஐ.நா. உலக உணவு திட்டம் (WFP) நிறுத்தியுள்ளது.

உலகளவில் வறுமை, பசி உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கும், போர், உள்நாட்டுக் கலவரங்கள், இயற்கை பேரிடர்கள் போன்ற காரணங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கும் WFP உதவி வழங்கி வருகிறது. இஸ்ரேல் போரின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், காசாவில் சுமார் 16 லட்சம் பேருக்கும், மேற்குக் கரையில் சுமார் 4 லட்சம் பேருக்கும் உணவு வழங்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WFP-ன் தற்காலிக தலைவர் கார்ல் ஸ்காவ் கூறியதாவது: பல நாடுகள் நன்கொடைகளை நிறுத்தியதால் அமைப்புக்கு கடும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காசாவில் 5 லட்சம் பேருக்கும், மேற்குக் கரையில் 2 லட்சம் பேருக்கும் வழங்கப்பட்ட உணவு உதவி இடைநிறுத்தப்படுகிறது.

அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்தப் பகுதிகளில் உணவு விநியோகத்தைத் தொடர சுமார் 4,270 கோடி ரூபாய் தேவை என அவர் சர்வதேச நாடுகளை வலியுறுத்தினார். உடனடியாக நிதி திரட்டப்படாவிட்டால், காசாவில் லட்சக்கணக்கானோர் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.