சென்னையில் சிறுமியர் மீது பாலியல் வன்முறை செய்ததாக கைது செய்யப்பட்ட ‘கிரானைட்’ வீரமணி (85) தொடர்பான விசாரணையில், சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க இடைத்தரகர் போல செயல்பட்ட ரியல் எஸ்டேட் தொழில் வர்த்தகர் பிரகாஷுக்கு ரூ.100 கோடி வழங்கியதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வீரமணியின் வங்கி பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, பிரகாஷ் என்பவருக்கு பெரிய தொகை அனுப்பப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. பிரகாஷ், வீரமணியின் மகளின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தவர் என்றும், குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்திருந்ததாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்தது.
இந்த வழக்கில் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் அவரது தோழி சாந்தி (61), அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் (63) உள்ளிட்ட எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாந்தி, வீரமணியின் சிறுமியர் மீதான நாட்டத்தை பயன்படுத்தி ரூ.50 கோடிக்கும் மேல் பறித்ததாகவும், 20க்கும் மேற்பட்ட சிறுமியரை அறிமுகப்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் கூறியது.
பிரச்னை எல்லை மீறிய நிலையில், வீரமணி சென்னை மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இரண்டு சொத்துகளை விற்று ரூ.100 கோடியை பிரகாஷுக்கு கொடுத்ததாகவும், அதில் ரூ.24 கோடியை பிரகாஷ் தனது வங்கி கணக்கில் வைத்திருந்தது கண்டறியப்பட்டு அந்த தொகை முடக்கப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்தது.
பிரகாஷ் தற்போது வெளிநாட்டிற்கு தப்பியுள்ளதாகவும், அவரை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும் போலீஸ் கூறியது. அவர் கைது செய்யப்பட்டால் எந்தெந்த போலீஸ் அதிகாரிகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்பதும் தெரியவர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.





