டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என இண்டி கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த போராட்டங்களை வெளிநாட்டு கலவரங்களுடன் இணைத்து பாஜ அரசியல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு வெளியிட்ட விசாரணை அறிக்கையை மேற்கோள் காட்டி, 13 நாடுகளில் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், ஏற்பாடு செய்யவும், தீவிரப்படுத்தவும் 101 அமைப்புகள் செயல்படுகின்றன என்று பாஜ கூறியது. விலைவாசி உயர்வு மற்றும் பள்ளிகளில் நிலவும் மோசமான நிலை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து பிரான்சில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதாகவும், அந்த கலவரத்துக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இளைஞர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டியதாக பாஜ தெரிவித்தது.
பாஜ செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குழப்பம் மற்றும் வன்முறைக்கான “மாடலை” முன்வைக்கிறார் என குற்றம்சாட்டினார். மேலும், “சிவப்பு-பச்சை போராட்டச் சூழலமைப்பு” எனக் குறிப்பிட்டு, சிவப்பு என்பது கம்யூனிஸ்ட் குழுக்கள், பச்சை என்பது இஸ்லாமிய குழுக்கள் என பாக்ஸ் நியூஸ் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு விளக்கினார்.
பாஜவின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்ட அறிக்கையில், குழப்பம் மற்றும் ஆட்சி மாற்றம் என்ற நோக்கத்துடன் காங்கிரஸ் செயல்படுகிறது என கூறி, 2025 ஏப்ரல் 10 அன்று ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் ‘ப்ரோக்ரசிவ் இண்டர்நேஷனல்’ அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தித்ததாக குறிப்பிட்டார். போராட்டங்களின் போது வெளிநாட்டு சக்திகளுடன் காங்கிரஸ் ஒருங்கிணைந்து செயல்பட்டதா என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் பாஜ முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் பாக்ஸ் நியூஸ் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் இதுவரை மவுனம் காத்து வருவதாக செய்தி குறிப்பிடுகிறது.





