இந்தியா–ரஷ்யா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரமோஸ் ஏவுகணை, பாகிஸ்தானுக்கு எதிரான “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு உலக நாடுகளின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.
இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சிஇஓ ஜெய்தீர்த் ஜோஷி, அந்த நடவடிக்கைக்குப் பின் சர்வதேச சந்தையில் பிரமோஸ் ஏவுகணைக்கு தேவை உயர்ந்துள்ளதாக கூறினார். பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை இது துல்லியமாக தாக்கியதாகவும், இதை உலக நாடுகள் விவாதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிரி நாடுகளின் ரேடாரை மீறி இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் பிரமோஸுக்கு இருப்பதாக ஜோஷி கூறினார். ஆப்பரேஷன் சிந்தூருக்குப் பிறகு உலகளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆயுத அமைப்புகளில் ஒன்றாக இது உருவெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காலத்தில் இந்திய முப்படைகளும் பிரமோஸ் ஏவுகணையுடன் தயாராக இருந்ததாக அவர் கூறினார். நிலம், போர்க்கப்பல் மற்றும் போர் விமானம் உள்ளிட்ட பல தளங்களில் இருந்து இதை செலுத்த முடியும் என்றும் விளக்கினார்.
மேலும், அடுத்த தலைமுறை பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ஜோஷி தெரிவித்தார். ரஷ்யாவுடன் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நாட்டின் ஆயுதப்படைகளுக்கு பிரமோஸ் வழங்க தயாராக இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.





