சென்னை: தமிழகம், கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் தரமற்ற மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தெரிவித்துள்ளது.
மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து மருந்து கிடங்குகள், விநியோக மையங்கள் மற்றும் விற்பனை இடங்களில் ஆய்வு நடத்துகின்றன.
ஆய்வுகளில் தரமற்றதாக கண்டறியப்படும் மருந்துகளின் விவரங்கள் மாதந்தோறும் மத்திய அரசுக்கு அனுப்பப்படுகின்றன. பொதுமக்கள் அறிய, இந்த தகவல்கள் CDSCO இணையதளமான https://cdsco.gov.in/ இலும் வெளியிடப்படுகின்றன.
ஆகஸ்ட் மாத ஆய்வுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 220 மருந்துகள் தரமற்றவையாக அடையாளம் காணப்பட்டன. முன்னணி நிறுவனங்கள் தயாரித்த நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள், உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகள் உள்ளிட்டவற்றிலும் தரக் குறைபாடுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த எண்ணிக்கையில் 45% ஆகும் 100 மருந்துகள் தமிழகம், கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசத்தில் கண்டறியப்பட்டவை. தமிழகமும் உத்தர பிரதேசமும் தலா 38 தரமற்ற மருந்துகளையும், கர்நாடகா 24 தரமற்ற மருந்துகளையும் பதிவு செய்துள்ளது.





