தகவல் வெளியீட்டு உத்தரவு ரத்து

விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானங்களில் பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டு பயண விவரங்களை தகவலறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.) மூலம் வெளியிட வேண்டும் என மத்திய தகவல் கமிஷன் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை டில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் கே. பத்ரா, 2013 ஏப்ரல் 1 முதல் 2018 ஜூன் 5 வரை, முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் விமானப்படை விமானங்களில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை ஆர்.டி.ஐ. மூலம் கோரியிருந்தார்.

2020 ஜூலையில், பாதுகாப்பு அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை நீக்கி மற்ற விவரங்களை வழங்குமாறு சிஐசி விமானப்படைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து விமானப்படை டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் நீதிபதி அமித் மகாஜன், பொதுநிதி செலவிடப்படுகிறது என்பதையே காரணமாகக் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பாதிக்கக்கூடிய தகவல்களை வெளியிட உத்தரவிட முடியாது எனக் கூறினார். குறிப்பிட்ட தகவல் வெளியீடு பிரதமரின் உயிருக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறுமா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் பாதுகாப்புக்கு பொறுப்பான முகமைகளுக்கே உரியது; அதில் நீதிமன்றமோ தகவல் கமிஷனோ தலையிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் சிஐசி உத்தரவு ரத்து செய்யப்பட்டது.