பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டம் விரிவாக்கப்பட்டதன் பின்னர், தமிழ்நாட்டில் வாங்கும் பழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உள்ளூர் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவதுடன் நகரங்கள், மாநகரங்களில் விற்பனை அதிகரித்து வருவதாகவும் அரசு ஆய்வு தெரிவிக்கிறது.

முந்தைய தி.மு.க. ஆட்சியில் ‘விடியல் பயணம்’ என்ற பெயரில் சாதாரண பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த கட்டத்தில் தினமும் சராசரியாக 7,500 சாதாரண கட்டண நகர பஸ் மற்றும் மலைப்பகுதி பஸ்களில் 59 லட்சம் பேர் பயணித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, இம்மாதம் 2ம் தேதி முதல் இதை ‘வெற்றி பயணம்’ என்ற பெயரில் விரிவாக்கியது. சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் ஏசி பஸ் தவிர மற்ற அனைத்து பஸ்களிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்; மாவட்டங்களில் சாதாரண, எல்.எஸ்.எஸ்., மலைப்பகுதி சாதாரண பஸ்களிலும் இதே சலுகை வழங்கப்படுகிறது.

அரசின் முதல் கட்ட தகவல்களின்படி, பல பஸ்களில் இலவசமாக ஏறி இறங்க முடிவதால், கிராமங்களில் வசிக்கும் பெண்கள் குழுக்களாக நகரங்களுக்கு சென்று மொத்த விலை பெரிய கடைகளில் மளிகை, ஜவுளி, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூரில் உள்ள கடைகளில் வாங்குதல் குறைந்து வணிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் குடும்ப செலவு மிச்சமாகிறது என மக்கள் கூறுவதாகவும், உறவினர்-நண்பர்கள் வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு குடும்பத்துடன் பஸ்சில் செல்வதும் அதிகரித்துள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. திட்டத்தின் சாதக-பாதகங்களை அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.