நியூயார்க்: உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் முழுமையற்ற புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை எதிர்மறையாக சித்தரிக்கும் முயற்சிகளை ஏற்க முடியாது என, ஐ.நா. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா கடுமையாக பதிலளித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் டில்லியில் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் கடுமையாக நடந்துகொண்டதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டினர். போராட்டங்களின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் நேற்று ஐ.நா. பொதுச் சபையின் மூன்றாவது குழுவில் நடைபெற்ற விவாதத்தில் எழுந்தது. அங்கு வெளியுறவு அமைச்சக துணை செயலர் பர்கா தம்ராகர், குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

மனித உரிமைகளை அரசியல் அழுத்தத்திற்கோ அல்லது குறிப்பிட்ட நாடுகளை மட்டும் குறிவைப்பதற்கோ பயன்படுத்தக் கூடாது என்று அவர் கூறினார். சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் இந்தியா தொடர்ந்து இணைந்து செயல்படுவதாகவும், ஆனால் அந்த ஒத்துழைப்பு பேச்சு, ஆலோசனை, பாரபட்சமின்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய அடிப்படைகளில் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், ஐ.நா. அறிக்கைகளில் இடம்பெறும் தகவல்களை பிரதிநிதிகள் சரியான முறையில் எடுத்துரைக்க வேண்டும் என்றும், மனிதாபிமான அடிப்படையில் தெரிவிக்கப்படும் தகவல்களை ஒரு நாட்டுக்கு எதிரான இறுதி தீர்ப்பாக சித்தரிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். முறையாக ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து உரிய நடைமுறைகள் வழியாக விளக்கம் அளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் முழுமையற்ற புள்ளிவிபரங்களை வைத்து இந்தியாவை எதிர்மறையாக காட்டும் முயற்சிகளை திட்டவட்டமாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.