மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சில இளைஞர்கள் இன்ஸ்டா ரீல்ஸ்களில் ‘டாண்’ போல தங்களை காட்டி பிரபலமாக முயல்வது, நேரடி மோதல்களாகவும் பழிக்குப்பழி வன்முறையாகவும் மாறும் நிலை அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்ஸ்டா ரீல்ஸ்களால் பிரபலமான ‘சுள்ளான்’ மதன் (26) முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலைக்குப் பிறகு அவரது ஆதரவாளர்கள் இன்ஸ்டாவிலேயே பழி தீர்ப்போம் என மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ‘யார் டாண்’ என இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டதையடுத்து ஏற்பட்ட மோதலில் சூர்யா (24) கொலை செய்யப்பட்டார். மேலும் 2021ல் கோவையில் அரிவாளுடன் வீடியோ வெளியிட்டது தொடர்பாக இருதரப்பினர் மோதியதில் அசோக்குமார் கொலை செய்யப்பட்டதாகவும், அதே ஆண்டில் எதிர்தரப்பினருக்கு வீடியோ மிரட்டல் விடுத்த ஸ்ரீராம் பழி தீர்க்கப்பட்டதாகவும் போலீசார் நினைவூட்டினர்.
ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவது, ரவுடியிசத்தை புகழ்வது, மிரட்டல் விடுப்பது போன்ற சமூக வலைதள செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என போலீசார் கூறினர். 20க்கும் மேற்பட்ட சமூகவலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும், போலி கணக்குகள் மற்றும் மாற்றுப் பெயர்களில் செயல்படுபவர்களை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்து வருகிறோம் என்றும் தெரிவித்தனர்.





