சென்னை நந்தனத்தில் உள்ள 80 ஏக்கர் அரசு நிலத்தை புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் அமைக்க பரிசீலிக்க வேண்டும் என தொழில்முறை நகரமைப்பு வல்லுநர்கள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமை செயலகம் மற்றும் சட்டசபையில் நெரிசல் அதிகரித்து வருவதால், மாற்று இடத்தில் புதிய வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பல இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தொழில்முறை நகரமைப்பு வல்லுநர்கள் சங்கத் தலைவர் கே.எம். சதானந்த், முதல்வர் விஜய் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு விரிவான அறிக்கையுடன் கடிதம் அனுப்பியுள்ளார். நகரமைப்பு பார்வையில் அண்ணா சாலையில் உள்ள நந்தனம் பகுதியிலான சுமார் 80.40 ஏக்கர் நிலம் ஏற்றதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையின் படி, அரசினர் பண்ணைக்கு அருகிலுள்ள இந்த அரசு நிலம் காஸ்மோபாலிட்டன் கிளப் மற்றும் கோல்ப் மைதான பயன்பாட்டுக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 1936ல் குத்தகைக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்தின் குத்தகை காலம் முடிந்துவிட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் குத்தகை புதுப்பிப்பு குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், அந்த நிலத்தை அரசின் தலைமை செயலக திட்டத்துக்காக மீட்டெடுத்து பயன்படுத்துவது சாத்தியமாக இருக்கும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். அண்ணா சாலையிலிருந்து இரண்டு அல்லது மூன்று நுழைவுகளை ஏற்படுத்த முடியும் என்றும், பின்புறம் அடையாற்றின் மேல் பாலம் அமைத்தால் கோட்டூர்புரத்துடன் இணைப்பை மேம்படுத்த வாய்ப்பு இருக்கும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.





