திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் ‘செயற்கை நுண்ணறிவு, சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவியல் விசாரணைகளில் புதிய சவால்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

அதில் பேசிய போக்சோ நீதிபதி சுரேஷ்குமார், சட்ட நுணுக்கங்களுடன் தொழில்நுட்ப அறிவையும் இணைத்து வழக்கறிஞர்கள் தங்களின் திறமையை மேம்படுத்த வேண்டும் என்றார். நீதிமன்றத்தில் மின்னணு ஆதாரங்களை தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் சான்றிதழ் தொடர்பான விதிகளை உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் வழியாக தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மரண தண்டனை என்பது ‘அரிதிலும் அரிதான’ வழக்குகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் அளவுக்கு கொடூரமான குற்றங்களுக்கு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த தண்டனை வழங்கப்படுவதாக அவர் விளக்கினார்.

கடுமையான குற்றங்களுக்கான உதாரணமாக, சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து அவளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் செயல்கள் மிகக் கடுமையானவை என அவர் குறிப்பிட்டார். மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த கல்வி, குடும்பம் உள்ளிட்ட வாய்ப்புகளை மதித்து, சட்டத்துடன் சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்; மேலும் போக்சோ நீதிமன்றங்களுக்கு நேரில் சென்று வழக்குகளின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.