பாகிஸ்தானுடன் அமெரிக்கா வைத்திருக்கும் உறவு, இந்தியா-அமெரிக்க உறவை எந்த வகையிலும் பாதிக்காது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனான தொடர்புகளை அமெரிக்கா தனித்தனியாகவே பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.

மூன்று நாள் இந்தியப் பயணத்தின் போது மும்பையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை ரூபியோ சந்தித்து பேசினார். பின்னர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்திருப்பதன் மூலம் இந்தியாவுக்கு கவலை அளிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்கவும், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவாவதைத் தவிர்க்கவும் உதவ முடியும் என அவர் விளக்கினார்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுக்க அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும், தன் பயணம், சந்திப்புகள் மற்றும் இணைந்து மேற்கொள்ளும் பணிகள் இந்தியா-அமெரிக்க உறவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை காட்டுவதாகவும் ரூபியோ கூறினார்.

சர்வதேச சூழல் குறித்து பேசுகையில், 1970களின் பனிப்போர் காலத்துடன் இன்றைய நிலையை ஒப்பிடுவது சரியல்ல என்றார். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது சிக்கலானது; எளிதில் முடிக்க முடிந்திருந்தால் அது ஏற்கனவே முடிந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ரூபியோ பார்வையிட்டார். அங்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். மேலும் ‘வன்தாரா’ வனவிலங்கு மீட்பு மையம் மற்றும் புதிய பசுமை எரிசக்தி உற்பத்தி வளாகத்தையும் அவர் சுற்றிப் பார்த்தார்; இது தனிப்பட்ட நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.