கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சுற்றிய வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை ஒரு வாரத்திற்கு நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், அமலாக்கத் துறை (ED) சட்டப்பூர்வ வரம்புகளை மீறி பிற விசாரணை அமைப்புகளின் அதிகார வரம்புக்குள் தலையிடக் கூடாது என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்த வழக்கு, பினராயியின் மகள் வீணாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு, எந்த சேவையும் பெறாமல் ‘சி.எம்.ஆர்.எல்’ (Cochin Minerals and Rutile Ltd) நிறுவனம் ரூ.2.78 கோடி வழங்கியதாக உள்ள குற்றச்சாட்டை மையமாகக் கொண்டது. இது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத் துறை பரிசீலனையின் பின்னர், பினராயி விஜயன், வீணா மற்றும் அவரது கணவர் முகமது ரியாஸ் ஆகியோருக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதை எதிர்த்து பினராயி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வு மனுவை விசாரித்து, முன்னாள் முதல்வர்களை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருப்பதாகவும், ஆனால் பிற விசாரணை அமைப்புகளின் அதிகார வரம்புக்குள் தலையிடக் கூடாது என்றும் குறிப்பிட்டது. மேலும், அமலாக்கத் துறை பரிந்துரையின் பேரில் ஒரே நாளில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது தவறானது எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும், உயர்நீதிமன்றத்தில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வரை லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு வாரத்திற்கு விசாரணை நடத்தக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





