திருப்பூர்: கோவில் சொத்துகள் தொடர்பான வழக்கில், ஹிந்து சமய அறநிலையத்துறையும் தமிழக அரசும் உரிமையாளர்கள் அல்ல; பாதுகாவலர்கள் மட்டுமே என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வரவேற்றுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், திராவிட கட்சிகள் ஆட்சிக் காலங்களில் கோவில் நிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசு, அவற்றை கைப்பற்றி பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற கட்டடங்களை அமைத்ததாக குற்றம்சாட்டினார்.

ஈரோடு மாவட்டம் கொடிமுடி–நாகபாளையம் மாரியம்மன் மற்றும் பொன்னாச்சியம்மன் கோவில்களின் சொத்து தொடர்பாக, தற்காலிக அறங்காவலரை நியமித்து, கலெக்டர் வழியாக தாசில்தாருக்கு தான செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து, அந்த இடத்தில் தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பரம்பரை அறங்காவலர் தொடர்ந்த வழக்கில், கோவில் சொத்துகளும் இனாம் சொத்துகளும் கோவிலுக்கே சொந்தம்; மாநில அரசும் அறநிலையத்துறையும் பாதுகாவலர்கள் மட்டுமே; அதிகாரிகள் மூலம் கோவில் சொத்துகளை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்ததாக அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து தீர்ப்பை ஏற்று, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு, அரசு ஆக்கிரமித்துள்ள சொத்துகளையும் கோவில்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.