வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிருப்தி தெரிவித்தார். இதனுடன், மதிப்புமிக்க மற்றொரு விருதான புலிட்சர் விருதையும் அவர் குறிப்பிட்டார்.
தெற்கு கரோலினாவில் நடந்த குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய டிரம்ப், தனக்கு நோபலும் புலிட்சரும் கிடைக்கவில்லை என்று கூறினார். மேலும், தன் எழுத்துக்காக புலிட்சர் விருது கிடைத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ரஷ்யா தொடர்பான விசாரணைகள் குறித்து செய்தி வெளியிட்டு இந்த ஆண்டு புலிட்சர் பெற்ற பத்திரிகையாளர்களையும் அவர் விமர்சித்தார். அந்த செய்திகளில் உண்மை இல்லை என்றும், தவறான தகவல்கள் வெளியிடப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதழியல், கலை மற்றும் இலக்கியத் துறைகளில் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் அமெரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருதாக புலிட்சர் விருது கருதப்படுகிறது. இதற்கான தேர்வை கொலம்பியா பல்கலைக்கழகம் நிர்வகிக்கிறது.
டிரம்ப் தனது பெயரில் வர்த்தகம், அரசியல் மற்றும் வியூகங்கள் தொடர்பாக சுமார் 20 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 1987ல் வெளியான தி ஆர்ட் ஆப் தி டீல் அவரது முதல் புத்தகம்; மேலும், பல நூல்கள் பிற எழுத்தாளர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை என்றும் குறிப்பிடப்படுகிறது.





