பிரான்சில் ஏற்பட்ட கலவரங்களுக்கும் இந்தியாவில், குறிப்பாக டில்லியை மையமாகக் கொண்டு நடைபெறும் போராட்டங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.வும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி “வெளிநாட்டு சக்திகளுடன்” இணைந்து நாட்டின் ஜனநாயகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க முயல்கிறார் என்றும் பா.ஜ.க. விமர்சித்தது.
இந்த குற்றச்சாட்டு, நாடு முழுவதும் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடர்பான சர்ச்சை பின்னணியில் முன்வைக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணி அவரது பதவி விலகலைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாத்தியா, ‘பாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சி செய்தி/ஆய்வை மேற்கோள் காட்டி, கம்யூனிச அமைப்புகள் மற்றும் தீவிரவாத குழுக்கள் இணைந்து ஒன்பது நாடுகளில் ஜனநாயக அரசுகளை கவிழ்க்க “சிவப்பு–பச்சை கூட்டணி” என்ற பெயரில் சதி செய்கின்றன என ஊடகங்களில் வெளியான தகவல்களை குறிப்பிட்டார். மேலும், ‘புரோகிரசிவ் இன்டர்நேஷனல்’ என்ற சர்வதேச கம்யூனிச அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த ஆண்டு ஏப்ரலில் டில்லி வந்து சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்ததாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, ராகுல் காந்தியின் வியட்நாம் பயணத்தையும் பா.ஜ.க. சந்தேகத்துடன் சுட்டிக்காட்டியது. ஆனால் காங்கிரஸ் தரப்பு, வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் தேர்தல் ஆணையத் தலைமையின்மீது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் கோபத்தை திசைதிருப்பவே பா.ஜ.க. இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது என மறுத்துள்ளது.





