புதிய சட்டமும் எதிர்ப்பும்

மஹாராஷ்டிராவில் சமீபத்தில் ‘மஹாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டம் - 2026’ நடைமுறைக்கு வந்துள்ளது. கட்டாயப்படுத்துதல், மோசடி, துாண்டுதல், தவறான சித்தரிப்பு அல்லது திருமணம் போன்ற வழிகளில் நடைபெறும் மதமாற்றங்களை குற்றமாகக் கருதும் வகையில் இந்தச் சட்டம் அமைந்துள்ளது.

முன் அறிவிப்பு விதி

இந்தச் சட்டத்தின் பிரிவு 6 படி, மதம் மாற விரும்பும் நபர்கள் 60 நாட்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும்.

உயர்நீதிமன்றத்தில் மனு

தானேவைச் சேர்ந்த 70 வயது முஸ்லிம் மத போதகர் இந்தச் சட்டத்தை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பு, அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் மதத்தை பரப்புவதற்கான சுதந்திரத்தை இந்தச் சட்டம் கட்டுப்படுத்துகிறது என வாதிட்டது.

நீதிமன்றக் கருத்தும் முடிவும்

தலைமை நீதிபதி மகேஷ் சி. திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா அமர்வு, சமூகத்தின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கவும், கட்டாயப்படுத்துதல் மூலம் நடைபெறும் மதமாற்றங்களைத் தடுக்கவும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்டது. மேலும், மதம் மாற்றிக்கொள்ள முழு சுதந்திரம் இருந்தாலும், திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மனு திரும்ப பெறப்பட்டது.