தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கட்சி தொண்டர்கள் கடிதம் எழுதி, சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணமானதாக கூறப்படும் நிர்வாகிகள் மீது முதலில் நடவடிக்கை எடுத்து, அதன் பின்னரே கட்சியில் சீரமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தோல்விக்குப் பிறகு நீங்கள் நியமித்த குழுக்கள் காரணங்களை ஆய்வு செய்து அறிக்கை அளித்ததாகவும், வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்படும் சில நிர்வாகிகள் குறித்தும் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், கருணாநிதி காலத்தில் வியூக நிறுவனங்கள் இல்லாமலேயே வெற்றிகள் கிடைத்ததாக கூறி, தற்போது ‘ஐபேக்’, ‘பென் டீம்’ போன்ற வியூக அமைப்புகளை முன்னிறுத்தி கட்சியை “கார்ப்பரேட்” போக்கில் நடத்துவதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர். முன்னாள் அமைச்சர்களான மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கட்சிக்குள் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பார்த்ததாகவும், பதவிகளை விலை பேசி விற்றதாகவும், தேர்தலில் தொகுதிகளை கோடிக்கணக்கில் விற்றதாகவும் கடிதத்தில் குற்றச்சாட்டு இடம் பெற்றுள்ளது.

ஆட்சியிலும் கட்சியிலும் இடைத்தரகர்களாக செயல்பட்டு கோடிகளை சுருட்டியவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை என கூறிய தொண்டர்கள், ‘சர்வே டீம்’களையும் நாணயமற்றவர்களையும் நம்பாமல் நிர்வாகிகளுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். கருணாநிதியைப் போல விசுவாசிகளை நியமித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடப்பதை கண்காணிக்க வேண்டும்; “குறுநில மன்னர்கள்” மற்றும் “புல்லுருவிகள்” என அவர்கள் குறிப்பிட்டவர்களை களையெடுக்காமல் அமைதி காத்தால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவும் எச்சரித்துள்ளனர்.