ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தொடர்பான கருத்துகளுக்கு இந்தியா கடுமையான பதிலடி அளித்தது.

ஐ.நாவுக்கான இந்திய நிரந்தரத் தூதரகத்தின் முதல் செயலாளர் பாவிகா மங்கலானந்தன் பேசுகையில், ஜம்மு-காஷ்மீரில் நடப்பவை குறித்து பாகிஸ்தான் காட்டும் “ஆழ்ந்த அக்கறை” அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளின் மீது செலுத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தன் நாட்டிலேயே சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அரசு இந்தியாவுக்கு அறிவுரை கூற தகுதி பெறாது எனவும் தெரிவித்தார்.

1999 கார்கில் போரைக் குறிப்பிட்டு, தனது சொந்த வீரர்களின் உடல்களைக் கூட ஏற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படும் நாடு நம்பிக்கை, மத சுதந்திரம், நல்லடக்கம் குறித்து உணர்ச்சிப் பெருக்குடன் பேசுவது முரண்பாடானது என அவர் விமர்சித்தார்.

மேலும் பயங்கரவாதம் அப்பாவி மக்களை கொல்வதோடு மட்டுமல்லாமல், ஒரு தேசத்தின் மனநிலையையும் சேதப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.