வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கோரிவருகிறது. இதன் ஒரு பகுதியாக சில இடங்களுக்கு மாற்றுப் பெயர்கள் சூட்டி வரைபடங்களையும் வெளியிட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய சர்வே அமைப்பு அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களை அதிகாரப்பூர்வ வரைபடங்களில் அடையாளம் கண்டு, இந்தியப் பெயர்களுடன் முறைப்படி பதிவேற்றி வெளியிட்டுள்ளது. இதற்கு சீனாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் பதிலடி கொடுத்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை (ஐடிபிபி) தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர், அருணாச்சல் எல்லையில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே பல இடங்களில் இன்னும் மோதல் நீடிப்பதாக தெரிவித்தார். எல்லையின் பல பகுதிகளில் சமீப நாட்களில் சீன ராணுவத்துடன் நேரடி மோதல் போன்ற சூழல் உருவாகி வருவதாகவும் கூறினார்.
சூழ்நிலையை ஐடிபிபி கமாண்டோ குழுக்கள் திறம்பட கையாள்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் சீனா தனது ராணுவத்தை நவீனமயமாக்க பெருமளவில் முதலீடு செய்து முன்னேறியுள்ளதால், வழக்கமான ராணுவ முறைகளால் உடனடியாக எதிர்கொள்வது சவாலாக இருக்கலாம் என்றும், இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்த ட்ரோன் தொழில்நுட்பம் முக்கிய வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.





