மும்பை: மராத்தா இடஒதுக்கீடு போராட்டத் தலைவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு ஆடியோ பதிவு, மஹாராஷ்டிராவில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், போராட்டத்தை பலவீனப்படுத்த ரூ.500 கோடி பணம் வழங்கப்பட்டதாகவும், அதில் மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தொடர்புடையவர் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் பா.ஜ.வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் ‘மஹாயுதி’ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2024 சட்டசபை தேர்தலுக்கு முன் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான போராட்டம் மாநிலம் முழுவதும் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.

ஜராங்கே பாட்டீல் பகிர்ந்த ஆடியோவில், ஒரு பெண் பேசும் குரலில், பா.ஜ. தரப்பு ரூ.500 கோடியை தற்போதைய துணை முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்கி, அதை ஜராங்கே பாட்டீலுக்கு ஒப்படைக்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், ஷிண்டேவின் மகனும் லோக்சபா எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே மூலம் அந்த பணம் வழங்க திட்டமிடப்பட்டதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஜராங்கே பாட்டீல், தாம் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும், போராட்டத்தை கைவிடவில்லை என்றும் கூறினார். தமது அரசியல் செல்வாக்கை குறைக்கவும், மராத்தா இடஒதுக்கீடு இயக்கத்தை பிளவுபடுத்தவும் திட்டமிட்ட சதி குறித்து இந்த ஆடியோ சுட்டிக்காட்டுவதாக கூறிய அவர், பிரதமர் மோடியும் முதல்வர் பட்னவிசும் உடனடியாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையே, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். பா.ஜ.விடம் இருந்து ரூ.500 கோடி பெற்றதுமில்லை, அதை யாருக்கும் வழங்கியதுமில்லை என கூறிய அவர், ஆதாரம் இருந்தால் சமர்ப்பிக்குமாறு ஜராங்கே பாட்டீலுக்கு சவால் விடுத்ததுடன், எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.