புதுடில்லியில் சுவாமி சின்மயானந்தரின் பாரம்பரியம் மற்றும் போதனைகளைப் போற்றும் வகையில் நடைபெற்ற ‘சின்மயா அமிர்த மஹோத்சவ்’ உலகளாவிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இதில் பங்கேற்றது தனித்துவமான ஆன்மிக அனுபவமாக இருந்ததாகக் கூறினார். நாட்டின் நலனை விரும்பும் அனைவரும், நாட்டை விழிப்புணர்வுடனும் செழிப்புடனும் வைத்திருக்க பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சுவாமி சின்மயானந்தர் தனது வாழ்நாள் முழுவதும் இதே கொள்கையுடன் செயல்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், ஆன்மிக விஷயங்களை மரியாதையுடன் பேசுவதோடு, தேசம் தொடர்பான சிக்கல்களை தெளிவாகவும் ஆர்வத்துடனும் எடுத்துரைத்தார் என்றார்.
மேலும், லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவின் கலாசாரத் தூதுவர்களாக செயல்பட்டு, இந்திய கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கின்றனர் என்று அவர் கூறினார். நாடு புதிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும், சமூகத்தைப் பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
சுயசார்பின் முக்கியத்துவம் குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதையும் பிரதமர் வலியுறுத்தினார். 2047க்குள் ‘வளர்ச்சி அடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடைவதற்கான பயணத்தில் அனைவரின் பங்களிப்பும் அவசியம்; இதற்காக இன்னும் தீவிரமாக செயல்பட்டு, ஒரே நோக்குடன் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





