ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. ரோஜர் மூர், சீன் கேனரி, திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரெய்க் உள்ளிட்ட பலர் 007 கதாபாத்திரத்தை ஏற்று புகழை உயர்த்தியுள்ளனர்.

இப்போது அடுத்த பாண்ட் படத்திற்கான தயாரிப்பு பணிகள் ஆரம்ப கட்டத்தில் நடைபெற்று வருகின்றன. அமேசான் நிறுவனத்திற்காக இந்த புதிய பாகத்தை டெனிஸ் வில்லென்யூவ் இயக்க உள்ளதாகவும், பீக்கி பிளைண்டர்ஸ் தொடரின் எழுத்தாளர் ஸ்டீவன் நைட் திரைக்கதை எழுதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு புதிய நடிகரை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடிகர் தேர்வு செயல்முறையும் தொடங்கியுள்ளது; ஸ்கிரீன் டெஸ்ட் மற்றும் ஆடிஷன்கள் நடைபெற்று வருகின்றன.

தேர்வில் சாகசக் காட்சிகளில் திறன், கேமரா முன் தோற்றம், வசன உச்சரிப்பு ஆகிய மூன்று அம்சங்களில் நடிகர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டுமென கூறப்படுகிறது.

பல பெயர்கள் பேசப்பட்டாலும், கேலம் டர்னர் முன்னணியில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜாக் லோடன், ஜேக்கப் எலார்டி, ஹென்றி கேவில், ஜான்சன், ஹாரிஸ் டிக்கின்சன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.