டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்திய விசா கட்டுப்பாடுகள், குறிப்பாக H-1B திட்டம் தொடர்பான மாற்றங்கள், இந்தியாவை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டவை அல்ல என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்திருந்த போது ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க தொழிலாளர்களுக்கும் தேசிய நலன்களுக்கும் முன்னுரிமை அளிப்பதே இந்த மாற்றங்களின் நோக்கம் என அவர் விளக்கினார். இதனால் அமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்கள் மட்டுமல்ல, அவர்களைப் பணியமர்த்த விரும்பும் அமெரிக்க நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த விதிமுறைகள் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்றும், மோசடி, முறைகேடுகள் மற்றும் அமெரிக்க தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழப்பது போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய அமெரிக்கா முயற்சிக்கிறது என்றும் ரூபியோ தெரிவித்தார்.
வணிகம் சார்ந்த குடிவரவுத் திட்டங்கள் பல நேரங்களில் கட்டுக்கடங்காத தவறான பயன்பாடு மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளதால், அவற்றை திருத்தும் முயற்சியாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.





