நாடு முழுவதும் விசாரணை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும், அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு உறுதி செய்துள்ள தனிநபர் சுதந்திரத்தை காலவரையின்றி பறிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் 2018–23 காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் (முதல்வர் அசோக் கெலாட்) மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை செயல்படுத்தியதில் போலி சான்றிதழ்கள் மூலம் ஒப்பந்தங்கள் பெற்றதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

2023ல் பா.ஜ.க. ஆட்சி அமைந்து முதல்வராக பஜன் லால் சர்மா பதவியேற்ற பின்னர், இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை 22 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இதில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சந்திர ஜோஷி (72) மற்றும் முகேஷ் பதக் கைது செய்யப்பட்டனர். முகேஷ் பதக் பிப். 18 முதல், சந்திர ஜோஷி மே 7 முதல் காவலில் உள்ளனர். வழக்கில் மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜாமின் கோரிய இவர்களின் மனுக்களை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஷீல் நாகு அமர்வு, பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் மற்றும் அதிகார அமைப்புகளின் கூட்டு சதி போன்ற குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டியவை என்றாலும், குற்றச்சாட்டின் தீவிரத்தை மட்டும் காரணமாக்கி ஜாமினை மறுக்கவோ, விசாரணை இல்லாமல் நீண்டகாலம் சிறையில் வைக்கவோ முடியாது என்று தெரிவித்தது.

புலனாய்வு முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 124 சாட்சிகள் மற்றும் சுமார் 20,000 பக்க ஆவணங்கள் இருப்பதால் விசாரணை தொடங்கவும் நீண்ட காலம் ஆகலாம் எனக் குறிப்பிட்டு, இருவரையும் உடனடியாக ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை பாதிக்க முயலக் கூடாது, விசாரணை நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.