சென்னை: காவலர்கள் சீருடையில் ஹிந்தி எழுத்துக்கள் இடம் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தமிழக காவல்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இந்த ஆண்டு தமிழகத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டபோது, ஹிந்தி எழுத்துக்கள் உள்ள அடையாளக் கொடியை சீருடையில் அணிய வற்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதிகாரிகள் விளக்கத்தில், 1959-ல் ஜம்மு–காஷ்மீர் லடாக் பகுதியில் சீனப் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி நாடு முழுதும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
அன்றைய தினத்தில் மட்டும் நாடு முழுதும் போலீசார் சீருடையில் அணியும் கொடி/அடையாளம், டில்லியில் அமைந்துள்ள தேசிய காவலர் நினைவு சின்னத்தின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினர். அந்த நினைவு சின்னம் 30 அடி உயர ஒரே கல்லால் உருவாக்கப்பட்டதாகவும், அதன் நடுவில் துப்பாக்கி மற்றும் அதன் மீது தொப்பி அமைந்துள்ளதாகவும் விளக்கினர்.
தமிழகத்திலும் அதே தேசிய அடையாளக் கொடியே அணியப்பட்டதாகவும், இதற்கு முன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களிலும் காவலர் வீர வணக்க நாளில் இதே அடையாளம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். சீருடை மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாக கூறுவதில் “துளியும் உண்மை இல்லை” எனவும் அவர்கள் கூறினர்.





