சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் (ஏவியன் இன்ஃப்ளூயன்சா) உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பூங்கா இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டது. இந்த நோய் மனிதர்களையும் பாதிக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதை கால்நடைத் துறையுடன் இணைந்து ஆய்வு செய்யவும் மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் அவ்வப்போது பறவை காய்ச்சல் கண்டறியப்படுவதாகவும், இந்த ஆண்டு பிப்ரவரியில் சென்னையில் கண்டறியப்பட்டதுடன் கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். பின்னர் கால்நடைத் துறையுடன் இணைந்து பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அப்போது மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறினர்.

தற்போது டெங்கு, ப்ளூ போன்ற காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில், மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம் என எச்சரித்தனர். எனவே நோயுற்ற அல்லது இறந்த பறவைகளை வெறும் கையால் எடுத்து அகற்றக் கூடாது என்றும், நகரப் பகுதிகளில் வீட்டு மொட்டை மாடிகளில் இறந்து கிடக்கும் காகம், புறா போன்றவற்றை பிளாஸ்டிக் அல்லது துணி பயன்படுத்தி பாதுகாப்பாக அகற்றி, பின்னர் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மேலும் கோழி இறைச்சியை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.