மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லி துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யமுனை நதிக்கு புத்துயிர் ஊட்டும் நோக்கிலான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதே நிகழ்ச்சியில் டில்லி நீர் வாரியம் சார்பில் ரூ.8,941.22 கோடி மதிப்பிலான நீர் தொடர்பான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

யமுனை புனரமைப்பு முயற்சிகள் முழு வேகத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும், நதி மாசுபடுவதைத் தடுக்கும் பணிகளில் குறுகிய காலத்திலேயே சுமார் 40% வரை நிறைவேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆட்சிக் காலங்களில் யமுனையில் சாக்கடை கழிவுநீர் கலக்க அனுமதிக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். தற்போது டில்லி, உத்தர பிரதேசம், ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. அரசுகள் இருப்பதால், காலக்கெடு கொண்ட கூட்டு செயல்திட்டத்தின் கீழ் துாய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

யமுனையில் கலக்கும் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரைத் தடுக்க நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும், 2029 மே மாதத்திற்குள் யமுனையை முழுமையாக சுத்தமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். இதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வலுப்படுத்துதல், சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், குடிநீர் வசதிகளை பெருக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.