பீஹார் மாநிலம் சிவான் மாவட்டம் அல்மாபூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை மாலை திடீரென வெடிப்பு ஏற்பட்டது. சம்பவ நேரத்தில் ஆலையில் பலர் இருந்ததாக கூறப்படுவதால், பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.

இந்த ஆலை உள்ளூர்வாசி முகமது அமிருதீன் மியான் என்பவருக்கு சொந்தமானதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலையில் அதிக அளவில் பட்டாசுகள் இருப்பு வைத்திருந்ததாகவும், அவை எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வெடிப்பின் தாக்கத்தில் கட்டடத்தின் முன்பகுதி இடிந்து, பட்டாசுகள் சாலையில் சிதறின. சாலையில் கொட்டிய பட்டாசுகள் தொடர்ந்து இடைவெளிவிட்டு பல மணி நேரம் வெடித்ததாக கூறப்படுகிறது.

வெடிப்பால் அருகிலிருந்த ஒரு கட்டடம் முற்றிலும் தரைமட்டமானதாகவும், சாலையிலும் இடிபாடுகளிலும் உடல்பாகங்கள் சிதறிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிச்சத்தம் முழுமையாக அடங்கிய பின்னர் கிராம மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது நிலைமை அதிர்ச்சியளிப்பதாக இருந்ததாக கூறப்படுகிறது.

முதல்கட்ட தகவலின்படி 8 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், உயிரிழப்பு எண்ணிக்கையை போலீசார் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. பாதுகாப்பு காரணமாக அந்த பகுதியை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.