வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக சென்னையில் தேர்தல் கமிஷன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், த.வெ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதிநிதிகள் திடீரென வெளிநடப்பு செய்து கூட்டத்தை புறக்கணித்தனர்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தலைமை செயலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனை, அடுத்த மாதம் மீண்டும் தொடங்கவுள்ள எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிக்கான முன்னேற்பாடாக நடத்தப்பட்டது. இதற்கு முன் சட்டசபை தேர்தலுக்கு முன் நடந்த எஸ்.ஐ.ஆர். பணியில் 74 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அட்டவணைப்படி, ஓட்டுச்சாவடிகளை சீரமைக்கும் பணிகள் நவம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ளன. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை பெறப்படும்; இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டது.
வெளிநடப்பு முதலில் த.வெ.க. சார்பில் பங்கேற்ற அமைச்சர் நிர்மல்குமார் மூலம் தொடங்கியது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர் வெளியேறினார். தொடர்ந்து த.வெ.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர்.
அதே கோரிக்கையுடன் ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதி வசீகரனும் வெளியேறினார். பின்னர் தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர். ஒன்பது கட்சிகள் வெளியேறிய நிலையில், பா.ஜ., அ.தி.மு.க., தேசிய மக்கள் கட்சி பிரதிநிதிகள் மட்டும் கூட்டத்தில் தொடர்ந்தனர்; வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி வலியுறுத்தினார்.





