சென்னையில் முதல்வர் விஜய்க்காக அரசு பங்களா ஒன்றை விரிவாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ‘எழில் இல்லம்’ என்ற பெயரை ‘வெற்றி இல்லம்’ என மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே 10-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு வந்து செல்கிறார். 18 கி.மீ. தூரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டுக்குச் செல்லும் முன் பட்டினம்பாக்கம் வீட்டில் சிறிது நேரம் தங்கி, அதை முகாம் அலுவலகமாகவும் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு பங்களாவை பயன்படுத்த முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இல்ல வளாகத்தில் உடற்பயிற்சி கூடம், பேட்மிண்டன் மைதானம், காவலர்கள் தங்கும் கூடம், நடைபாதை, புல் தரைகள், ஐந்து முதல் ஆறு பேர் அமரும் வகையிலான சிறிய கூட்டரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது.
இந்த கூட்டரங்கத்தில் முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வழக்கமாக இத்தகைய சீரமைப்பு பணிகளை பொதுப்பணித் துறை மேற்கொள்ளும் நிலையில், முதல்வருக்கு பிடித்த வகையில் தனியார் வாயிலாக வடிவமைக்கப்படுவதாகவும், இதுவரை டெண்டர் கோரப்படவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் முடிந்ததும் அடுத்த மாதம் முதல்வர் அங்கு குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல். இந்த இல்லம், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வசிக்கும் ‘குறிஞ்சி இல்லம்’ இருந்து நான்கு வீடுகள் தள்ளி இருப்பதாகவும், அருகில் அமைச்சர்கள் நிர்மல்குமார், செங்கோட்டையன், வெங்கட்ரமணன் உள்ளிட்டோரின் பங்களாக்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் தியாகராஜன் இந்த இல்லத்தில் வசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





