தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதே நேரத்தில் வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் மேலும் வலுவடைந்ததாக கூறப்படுகிறது. இது இன்று (அக்.24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும், நாளை (அக்.25) வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை உருவாகக்கூடிய இந்த அமைப்பு திங்களன்று ‘அர்னாப்’ புயலாக வலுப்பெறும் எனவும், அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த புயல் அக்டோபர் 28 காலை ஆந்திர கடலோர பகுதிகளை நெருங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பாதை மாறி ஆந்திராவில் கரையை கடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் தாக்கத்தால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





