விராலிமலை அருகே மலம்பட்டி கிராமத்தில் உள்ள லிங்கமலையை பாதுகாக்க வலியுறுத்தி, ஹிந்து முன்னணி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளது. அந்த மலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவில், கோவில் மன்னர் அழகிய மணவாள தேவன் கட்டியதாகவும், சோழர்கால கல்வெட்டுகள், சிற்பங்கள், நந்தி சிலை, பழமையான மண்டபம் உள்ளிட்ட வரலாற்றுச் சான்றுகள் அரசு ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பல தலைமுறையாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் உள்ளிட்ட வழிபாடுகளை நடத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் தொன்மை மற்றும் கல்வெட்டுகளை சேதப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடப்பதாகவும், லிங்கமலை உச்சியில் கிறிஸ்துவர்கள் சிலுவை வைத்ததாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குளத்தூர் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான பேச்சில், அந்த சிலுவை சட்டவிரோதமானது என்றும், இது மத மோதலை உருவாக்கக்கூடிய செயல் என்றும் கூறப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிலுவையில் எந்த பராமரிப்பும் செய்யக்கூடாது, அது அகற்றப்பட வேண்டும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அனுமதியின்றி இருதரப்பினரும் அங்கு எந்தச் செயலும் செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நேற்று சிலுவையை பராமரித்து பாதையை சுத்தம் செய்தபோது போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும், லிங்கமலை என்ற பெயரை “சவேரியார்மலை” என மாற்ற முயற்சி நடப்பதாகவும் கூறி, பிரச்னையைத் தூண்டி மத மோதலை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து முன்னணி கோரியுள்ளது.





