கோயில்களுக்குள் பிற மதத்தினர் மத அடையாளங்களுடன் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்து முடித்து வைத்தது.
மதுரையைச் சேர்ந்த தங்கம் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவில், சிலர் அரசியல் நோக்கத்துடன் பிற மத அடையாளங்களுடன் கோயிலுக்கு வந்து வழிபடுவதாகவும், கடவுள் மீது நம்பிக்கை இருப்பதாக பெயரளவில் கூறி கையெழுத்திட்டு செல்கிறதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. கோயில் நுழைவுக்கான சட்டம் மற்றும் விதிகளை மீறுபவர்கள்மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
மேலும், விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்தி, பிற மத அடையாளங்களைத் தாங்கியவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட மதத்தைப் பின்பற்றாதவர்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பு வலியுறுத்தியது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வு விசாரித்தது. விசாரணையில், திருவண்ணாமலை கோயிலில் குல்லா அணிந்து மத அடையாளத்துடன் ஒருவர் சென்றது ஏற்புடையதல்ல என்றும், விதிமுறைப்படி சென்று பதிவேட்டில் கையெழுத்திடுவது போன்ற நடைமுறைகள் ஏற்புடையவை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், விதிமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்படுகின்றன; தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.





