இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) நிறுவன தினம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் படையினருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தியில், ஐடிபிபி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். வீரத்தின் மூலம் படை தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு சவாலையும் உறுதியுடன் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னலமற்ற சேவையும் தியாகங்களும் தேசத்திற்குப் பெரும் ஊக்கமளிப்பதாகவும் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பனி படர்ந்த மலைப்பகுதிகளிலும் கடுமையான காலநிலையிலும் படையினர் உறுதியாகச் செயல்படுவதைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் வீரவணக்கம் செலுத்தினார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மிகக் கடுமையான தட்பவெப்ப நிலைகளிலும் இந்திய எல்லைகளைப் பாதுகாப்பதில் ஐடிபிபி முக்கியப் பங்காற்றியுள்ளதாகக் கூறினார். இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளிலும் படை குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளதாகவும், அவர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.





