நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் மிக கனமழையால் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண்சரிவுகளும் ஏற்பட்டதால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர், கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் மலைப்பாதைகளை தவிர்க்குமாறும் அறிவுறுத்தினார். மேலும் நீர்வீழ்ச்சிகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

மண்சரிவு, மரங்கள் விழுதல், பாறைகள் சரிதல், திடீர் வெள்ளப்பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் விழிப்புடன் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவுரைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையைத் தவிர பொதுமக்கள் பொது இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லாமல் இருக்கவும், வாகனங்களை மரங்களின் கீழ் நிறுத்தாமல் இருக்கவும் கூறப்பட்டுள்ளது.

மழை பெய்யும் நேரங்களில் மின்கம்பங்கள், மின்கம்பிகளை தொடக்கூடாது எனவும் கலெக்டர் எச்சரித்தார். முன்னெச்சரிக்கையாக அரசு பஸ் சேவைகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா எண் 1077 அல்லது 0423-2450034, 0423-2450035 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். உள்ளூர் எண்கள்: ஊட்டி 0423-24455772, குன்னூர் 0423-2206002, கூடலூர் 04262-261296, குந்தா 0423-2508123, பந்தலூர் 04262-220734.