நீலகிரி மாவட்டத்தில் இரவு பெய்த கனமழையால் குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மரங்களும் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டியில் இருந்து கோவைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்தது. பர்லியாறு போலீஸ் சோதனைச்சாவடி அருகே சாலையில் மரம் விழுந்து கிடந்ததால் பஸ் முன்னே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் பஸ்ஸில் இருந்து இறங்கி பர்லியாறு நோக்கி சென்றனர்; டிரைவர் மற்றும் கண்டக்டர் மட்டும் பஸ்ஸில் இருந்தனர்.
அந்த நேரத்தில் மலைப்பகுதியில் இருந்து மரங்கள், பாறைகள் கலந்த பெரிய மண் சரிவு பஸ் மீது விழுந்து, வாகனம் முழுவதும் மண்ணில் புதைந்தது. டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் இரவு முழுவதும் பஸ்ஸுக்குள் சிக்கிய நிலையில், தகவல் அறிந்த மீட்புக்குழுவினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
மீட்பு பணியில் கண்டக்டர் கேசவன் காயங்களுடன் வெளியேற்றப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிரைவர் ஜனகராஜ் சடலமாக மீட்கப்பட்டார்.
மேட்டுப்பாளையம்–குன்னூர் மலை ரயில் பாதையிலும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் சேவை இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அமைச்சர்கள் கமலி, சம்பத் குமார் மற்றும் ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி. உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.





