தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களையும் மறுஅறிவிப்பு வரும் வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நீலகிரியில் நேற்று இரவு முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கை உள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கலெக்டர் லட்சுமி பவ்யா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தொடர் மழையால் சாலைகளில் மரங்கள் விழுதல், மண்சரிவு போன்ற காரணங்களால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். நிலைமை சீராகும் வரை முன்னெச்சரிக்கையாக இந்த மூடல் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




