தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்; நாளை மறுநாள் காலை மேற்கு மத்திய வங்கக்கடலில் புயலாக வலுவடையும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர் இந்த அமைப்பு வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிஷா கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. இதன் காரணமாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று பதிவான மழையளவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 16 செ.மீ. அதிகபட்சமாக பதிவானது. அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் சின்னகாமன்பட்டியில் 14 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் சமுத்திராப்பட்டியில் 13 செ.மீ. மழை பதிவானதாக வானிலை மையம் கூறியது. வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.